புதிய சட்டமன்ற கட்டுமான பணிக்கு ஜூலை மாதம் டெண்டர்


புதிய சட்டமன்ற கட்டுமான பணிக்கு ஜூலை மாதம் டெண்டர்
x

புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட ஜூலை மாதம் டெண்டர் விடப்படும் என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதுச்சேரி

புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட ஜூலை மாதம் டெண்டர் விடப்படும் என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதிய கட்டிடம்

புதுவை சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம் ரூ.450 கோடி மதிப்பில் தட்டாஞ்சாவடியில் கட்டப்பட உள்ளது. இதற்கான மாதிரி வரைபடத்தை தயாரிக்கும் பணியில் டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனத்தினர் சட்டமன்ற கட்டிடம் மற்றும் தலைமை செயலக கட்டிடம் ஆகியவை அருகருகே இருக்கும் வகையில் மாதிரியை தயார் செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் காட்டினார்கள். அதில் சில திருத்தங்களை செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சபாநாயகர் செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜூலையில் டெண்டர்

புதுவை சட்டசபையின் வரைபடம் இறுதிநிலையை எட்டியுள்ளது. இந்த மாத இறுதிகள் அது முடிவு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. மத்திய அரசின் அனுமதி அதற்கு கிடைத்துவிடும்.

அதைத்தொடர்ந்து ஜூலை 15-ந்தேதிக்குள் டெண்டர் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புதிய சட்டமன்ற கூட்ட அரங்கில் 60 எம்.எல்.ஏ.க்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காகித பயன்பாடு இல்லாத வகையில் இந்த சட்டமன்ற செயல்பாடு டிஜிட்டல் முறையில் அமைய உள்ளது.

18 மாதத்துக்குள்...

மேலும் சட்டமன்ற வளாகத்திலேயே நிகழ்ச்சிகள் நடத்த சுமார் 1000 பேர் அமரும் வகையில் அரங்கும் அமைக்கப்படுகிறது. சட்டமன்றமும் தலைமை செயலகமும் தனித்தனியே இருந்தாலும் இரண்டையும் இணைக்கும் விதமாக முதல் மாடியில் இணைப்பும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த சட்டமன்ற கட்டிட கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டு 18 மாதத்துக்குள் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story