பழைய இரும்பு கடையில் பயங்கர தீ


பழைய இரும்பு கடையில் பயங்கர தீ
x

கன்னியக்கோவிலில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது.

பாகூர்

கன்னியக்கோவிலில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது.

பழைய இரும்பு கடை

கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் மணப்பட்டு ரோட்டில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் கடை உள்ளது. இந்த கடையில், சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் இருந்து ரசாயனம் கலந்த தேவையற்ற பொருட்களை வாங்கி அதை மறுசுழற்சி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த கடையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். இன்று மதியம் பழைய இரும்பு பேரல்களை வெல்டிங் எந்திரம் மூலம் சிலர் கட்டிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

தீ விபத்து

அப்போது பேரலில் இருந்த ரசாயனம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் கடையை விட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

ரசாயனத்துடன் தீ எரிந்ததால் அப்பகுதியில் வானில் கரும்புகை மண்டலம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இது பற்றி அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கிரி தலைமையில் தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் புதுச்சேரியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. சுமார் ஒருமணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.

பொருட்கள் எரிந்து நாசம்

இந்த பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டும் இதேபோல் இந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story