பெரிய மார்க்கெட்டை முழுமையாக இடிக்கும் முடிவை கைவிட வேண்டும்


பெரிய மார்க்கெட்டை முழுமையாக இடிக்கும் முடிவை கைவிட வேண்டும்
x

பெரிய மார்க்கெட்டை முழுமையாக இடிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். வியாபாரிகளுக்கு ஆதரவாக வருகிற 31-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய தேசிய ஒருங்கிணைந்த வளர்ச்சி கூட்டணி முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி

பெரிய மார்க்கெட்டை முழுமையாக இடிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். வியாபாரிகளுக்கு ஆதரவாக வருகிற 31-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய தேசிய ஒருங்கிணைந்த வளர்ச்சி கூட்டணி முடிவு செய்துள்ளது.

வளர்ச்சி கூட்டணி

புதுவை முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று இந்திய தேசிய ஒருங்கிணைந்த வளர்ச்சி கூட்டணி கூட்டம் (இந்தியா கூட்டணி) நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் சேதுசெல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் மற்றும் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வியாபாரிகளுக்கு ஆதரவு

* புதுவை பெரிய மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மறுகட்டுமானம் செய்துள்ளதாகவும், அதற்காக வியாபாரிகள் ரோடியர் மில் வளாகத்துக்கு கடைகளை மாற்றி கொள்ளுமாறும் புதுவை நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் வியாபாரிகளுக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சி கூட்டணி ஆதரவு தெரிவிப்பது,

* வியாபாரிகளை அடக்குமுறையை கையாண்டு வெளியேற்றும் திட்டமிருந்தால் அரசு அதை கைவிட வேண்டும். இது எதிர்மறை விளைவுகளை உருவாக்கும். எனவே பெரிய மார்க்கெட்டை முழுமையாக இடிக்கும் முடிவினை கைவிட வேண்டும்.

கண்டன ஆர்ப்பாட்டம்

*பழைய சிறைச்சாலை பகுதியில் ஒரு பகுதி வியாபாரிகளுக்கு இடம் அமைத்து தந்து கட்டுமானத்தை தொடங்கவேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) நேரு வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

* மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசின் ஏமாற்று நாடகம் அம்பலமாகியுள்ளது. இதற்கு இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எதிர்கொள்ள தயார்

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் கூறும்போது, மார்க்கெட் கட்டுமான பணிகள் தொடர்பாக வியாபாரிகளை கலந்து ஆலோசிக்கவில்லை. அதுதொடர்பான வரைபடத்தையும் காட்டவில்லை. அதிகாரிகள் கலவரத்தை தூண்டும் போக்கில் செயல்படுகின்றனர். அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.


Next Story