வெளி மாநில ஆட்டோக்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்


வெளி மாநில ஆட்டோக்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்
x

புதுவையில் வெளிமாநில ஆட்டோக்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம், ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தினர்.

அரியாங்குப்பம்

புதுவையில் வெளிமாநில ஆட்டோக்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம், ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தினர்.

நல்லுறவு கூட்டம்

அரியாங்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ டிரைவர்கள்-போலீசார் நல்லுறவு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கணேஷ், இனியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், முருகானந்தம் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள், ஆட்டோ நிறுத்தங்கள் உள்ள பகுதியில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வாடகை கார்களும், ஆட்டோக்களும் வந்து செல்கின்றன. இதனால் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆட்டோக்கள் புதுச்சேரி எல்லையான கிருமாம்பாக்கம் வரை வந்து செல்கின்றன. ஆனால் புதுச்சேரி உரிமம் பெற்ற ஆட்டோக்கள் கடலூர் எல்லையான மஞ்சக்குப்பம் வரை செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆட்டோக்கள் புதுவை மாநிலத்தில் இயக்க தடை விதிக்க வேண்டும். சாராயக்கடைகளும், மதுபான கடைகளும் மது பிரியர்களை இலவசமாக அழைத்து வர ஒரு சில ஆட்டோக்களை பயன்படுத்துகின்றன. இதனால் சக ஆட்டோ ஊழியர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தனர்.

கூடுதல் பயணிகளை ஏற்றக்கூடாது

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் பேசுகையில், ஆட்டோ தொழிலாளர்களும் ஒரு வகையில் காவலர்கள் தான். வெளியூரிலிருந்து வரும் பயணிகள் ஆட்டோவை நம்பித்தான் பெரும்பாலும் வருகின்றனர். குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆட்டோ டிரைவர்கள் போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றிற்கு பெயர் போனவர்கள் ஆட்டோ டிரைவர்கள்.

அரசு விதிமுறையை மீறி கூடுதலாக பயணிகளை ஏற்றக்கூடாது. பள்ளி குழந்தைகளையும் அதிகளவில் ஏற்றி செல்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் தவறாமல் சீருடை அணிந்தும் அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்து கொண்டு தான் ஆட்டோக்களை ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் எந்த நேரத்திலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.


Next Story