போலீஸ் நிலையத்தைபால் உற்பத்தியாளர்கள் முற்றுகை


போலீஸ் நிலையத்தைபால் உற்பத்தியாளர்கள் முற்றுகை
x

முத்தியால்பேட்டை பகுதியில் காணாமல் போன மாடுகளை மீட்டு தரக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

முத்தியால்பேட்டை

காணாமல் போன மாடுகளை மீட்டு தரக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மாடுகள் மாயம்

புதுவை முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பத்தை சேர்ந்தவர் பழனி (வயது 47). பால் வியாபாரியான இவரது மாடு ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனது. இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பழனி, பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணனிடம் தெரிவித்தார். அவரது மாடும் காணாமல் போன நிலையில் அதை கண்டுபிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் நேற்று முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் நிலைய வாசலில் அமர்ந்து அவர்கள் தர்ணாவிலும் ஈடுபட்டனர். காணாமல் போன மாடுகளை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை இடமாற்றம் செய்யவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை உள்ளே அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வழக்குப்பதிவு செய்து மாடுகளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story