பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 இடங்களில் ஒலிபரப்பு


பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 இடங்களில் ஒலிபரப்பு
x

புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.

மனதின் குரல் நிகழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி முதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் வானொலியில் ஒலிபரப்பாகி வருகிறது. அதன்படி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியை புதுவை மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மீனவளத்துறை

அதன் ஒருபகுதியாக மீனவர் நலம் மற்றும் மீன்வளத்துறை சார்பாக மணவெளி தொகுதி நல்லவாடு மீனவ கிராம சமுதாய நலக்கூடத்தில் ஒலிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர்கள் கவியரசு, கோவிந்தசாமி, சாஜிமா, ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள், நல்லவாடு, புதுகுப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் மீனவர் நலம் மற்றும் மீன்வளத்துறையின் சார்பாக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மீனவ மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் சபாநாயகர் செல்வம் அறிவுறுத்தலின்படி மணவெளி தொகுதியில் தானாம்பாளையம், பூரணாங்குப்பம், நோணாங்குப்பம், மணவெளி, டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரபரப்பு செய்யப்பட்டது.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு பகுதியில் நடந்த மனதின் குரல் ஒலிபரப்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு, கட்சியினருடன் அமர்ந்து மோடியின் உரையை கேட்டார்.

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி., பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஊசுடு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் அமைச்சர் சாய். சரவணன்குமார், தொகுதி தலைவர் சாய.தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 500 பேருக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.


Next Story