புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது


புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது
x

புதுவை சட்டசபை நாளை கூடும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

புதுச்சேரி

புதுவை சட்டசபை நாளை கூடும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

10 சதவீத இடஒதுக்கீடு

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடந்தது. மார்ச் 31-ந்தேதி முதல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

6 மாதத்துக்கு ஒருமுறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி புதுவை சட்டசபை நாளை (புதன்கிழமை) கூடுகிறது. காலை 9.30 மணிக்கு மைய மண்டபத்தில் கூட்டம் தொடங்குகிறது. கூட்டத்தை சபாநாயகர் செல்வம் திருக்குறளை வாசித்து தொடங்கி வைக்கிறார்.

நாைய கூட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் திட்டம்

இதுதவிர சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டுள்ளன. குறிப்பாக புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவது தொடர்பாக நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் சட்டமன்ற அறிவிப்புகளான குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாதது, மாநில அரசு சார்பில் கியாஸ் மானியம் வழங்காதது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க.வும் வரிந்து கட்ட தயாராகி வருகிறது. இந்த கூட்டம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

சபாநாயகர் ஆய்வு

இந்தநிலையில் சட்டமன்ற கூட்டம் நடக்கும் மைய மண்டபம் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த பணிகளை சபாநாயகர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சட்டசபை செயலாளர் தயாளன் உடனிருந்தார்.

மேலும் சட்டசபையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் நேற்று மாலை மோப்பநாய் உதவியுடன் சட்டசபை வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதே போல் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அங்கு சோதனை மேற்கொண்டனர்.


Next Story