அனுமதி கிடைக்காததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்


அனுமதி கிடைக்காததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்
x

அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காததற்கு அதிகாரிகளின் அலட்சியபோக்கே காரணம் என்று பா.ம.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி

அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காததற்கு அதிகாரிகளின் அலட்சியபோக்கே காரணம் என்று பா.ம.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

பா.ம.க. புதுவை மாநில அமைப்பாளர் கணபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிகாரிகள் அலட்சியம்

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அதிகாரிகளின் அலட்சியபோக்குதான் காரணம். இந்திய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ள குறைகளை உடனடியாக அதிகாரிகள் நிவர்த்தி செய்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வாங்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் மருத்துவம் படிக்க இந்த கல்லூரி கொண்டு வரப்பட்டது.

இந்த கல்லூரியை இ.எஸ்.ஐ.க்கு வழங்க முடிவெடுத்தபோது மத்திய சுகாதார மந்திரியாக இருந்த அன்புமணி ராமதாஸ் புதுவை மாநிலத்துக்கு என ஒரு கல்லூரி வேண்டும் என்று அறிவுரை கூறி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கினார்.

ஆண்டுதோறும் ஆய்வு செய்து இந்திய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்யாமல் இருந்ததால் இன்றைக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கு படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஆய்வகங்கள், அடிப்படை வசதிகளை உடனடியாக உருவாக்கவேண்டும். மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது புதுவை அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். முதல்-அமைச்சர் உடனடியாக அதிகாரிகளை அழைத்துபேசி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வாங்கவேண்டும்.

கூடுதல் இடங்கள்

அதேபோல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் புதுவை மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை கேட்டுப்பெற வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன்பாக எந்தெந்த கல்லூரியில் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் அரசு வெளியிட வேண்டும்.

புதுவை மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதற்கு காட்டுகின்ற அக்கறையை மாணவர் நலன், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கணபதி கூறியுள்ளார்.


Next Story