'கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்'


கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்
x

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் 18 வகை கலைஞர்கள் அங்கீகரிப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் 18 வகை கலைஞர்கள் அங்கீகரிப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

விஸ்வர்மா திட்டம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் தொடக்க விழா இன்று நாடு முழுவதும் உள்ள 70 மையங்களில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் ஜிப்மர் வளாகத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கலையரங்கத்தில் நடந்தது.

இந்த விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் இணை மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.13 ஆயிரம் கோடி

கொல்லர், பொற்கொல்லர், குயவர், தச்சர், சிற்பி உள்ளிட்ட பாரம்பரிய கலைஞர்களை உள்ளடக்கிய விஸ்வகர்மா சமுதாயத்தின் வாழ்க்கை முறையை மேம்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையாகும். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் இன்னும் 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 30 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவர். இதற்காக ரூ.13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படை குறிக்கோள் என்பது விஸ்வகர்மா சமுதாயத்தினரை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அதிகாரம் பெற வைத்தலே ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

18 வகை கலைஞர்கள் அங்கீகரிப்பு

பிரதமர் மோடி தொடங்கியுள்ள இந்த திட்டம் மிகவும் சிறப்பான திட்டமாகும். இந்த திட்டத்திற்கு 18 வகையான கலைஞர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரம் உயரவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அவர்களை ஊக்குவித்து தொழிலை மேம்படுத்த இந்த திட்டம் உதவுகிறது.

கைவினை கலைஞர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி வாங்குகின்றனர். கிராம பகுதிகளில் கைவினை கலைஞர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் பெரிய அளவில் உயர்ந்திருக்காது. கலைஞர்கள் பெரும்பாலும் நலிந்து போய் தான் இருப்பார்கள். அவர்களை ஊக்குவித்து, நல்ல பயிற்சி அளித்து வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம். அதனை உயர்த்தும் வகையில் தான் பிரதமர் தொடங்கிய இந்த திட்டம் உள்ளது.

வாழ்க்கைத் தரம் உயரும்

புதுச்சேரி மாநிலத்திற்கு தற்போது வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்லால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் இங்குள்ள கைவினை பொருட்களை விரும்பி வாங்கி செல்கிறனர். அதற்கு ஏதுவாக கடற்கரை சாலையில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் இடம் உள்ளது.

கைவினை கலைஞர்களுக்கு வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். வங்கிகள் அவர்களை அலைக்கழிக்காமல் எளிதாக கடன் வழங்க வேண்டும் என்பது எனது எண்ணம். கைவினை பொருட்கள் விற்பனை ஆகும்போது அவர்களின் வாழ்க்கை தரம் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி உரை

விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக் குமார், சாய் சரவணன்குமார், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையரும், தொழில்துறை செயலாளருமான ஜவகர், இயக்குனர் ருத்ர கவுடு மற்றும் 18 வகையான கைவினைத் தொழில்கள் செய்யும் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின்போது, டெல்லி துவாரகா யாஷோபூமியில் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றிய நிகழ்ச்சி காணொலிக்காட்சி மூலமாக ஒளிபரப்பப்பட்டது.


Next Story