தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு


தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x

திருக்கனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது. தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது. தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தனியார் நிறுவன ஊழியர்

திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் தில்லை கோவிந்தன் (வயது 42). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றபோது முடியவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து வீட்டின் பின்பக்கம் சென்றுபார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள், ரூ.12 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து திருக்கனூர் போலீசில் தில்லை கோவிந்தன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப் பட்டது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

திருக்கனூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாதானூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியின் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் மட்டுமல்லாது வீட்டில் இருந்த பூண்டு, காய்கறிகள், சிலிண்டர் உட்பட மளிகை பொருட்களையும் அள்ளி சென்றனர்.

இதேபோல் சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரில் மருந்து கடை ஊழியர் ரமேஷ் வீடு மற்றும் அதே பகுதியில் 2 வீடுகளிலும் திருட்டு நடந்தது. அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. மர்ம கும்பல் திருக்கனூர் பகுதியில் தங்கியிருந்து ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு கொள்ளையடித்து வருவது தெரியவந்தது.

தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே திருக்கனூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், திருக்கனூர் கடைவீதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story