ரெயில்வே தளவாடங்கள் திருட்டு

திருநள்ளாறில் ரெயில்வே தளவாடங்கள் திருட்டில் சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியில், காரைக்கால்-பேரளம் வழித்தடத்தில் புதிய ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு ஏராளமான தளவாட சாமான்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கட்டுமான இரும்பு பொருட்கள் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து ரெயில்வே கட்டுமான பொறியாளர் மணிகண்டன் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் வழக்குப்பதிவு செய்து, திருநள்ளாறு பகுதியில் பழைய இரும்புகள் வாங்கும் கடைகளை ஆய்வு செய்தார். அப்போது சந்தேகத்தின்பேரில், திருநள்ளாறு அம்பேத்கர் நகரைச்சேர்ந்த மாதேஷ் (வயது 19) மற்றும் அவரது நண்பர்கள் 17 வயதுள்ள 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான இரும்புப்பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில், 3 பேரையும் கைது செய்த போலீசார் திருட்டுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.






