டிப்பர் லாரி மோதி என்ஜினீயர், பெண் படுகாயம்


டிப்பர் லாரி மோதி என்ஜினீயர், பெண் படுகாயம்
x

திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் என்ஜினீயர், பெண் படுகாயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் லாரியை அடித்து நொறுக்கி தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் என்ஜினீயர், பெண் படுகாயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் லாரியை அடித்து நொறுக்கி தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

என்ஜினீயர்

திருக்கனூர் அருகே தமிழக பகுதியான தொள்ளாமூர் மாரியம்மன் கோவில் தெருவை ராஜ்குமார் (வயது 32). இவர் அயர்லாந்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு ராஜ்குமார், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் இன்று காலை ராஜ்குமார், அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான நிலவழகி (37) என்பவரை வேலைக்காக சுத்துக்கேணியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

2 பேர் படுகாயம்

சுத்துக்கேணி மெயின் ரோட்டில் மயிலம் பாதையில் துர்கா கோவில் அருகே சென்றபோது, திருவக்கரையில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி திடீரென ராஜ்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜ்குமார் மற்றும் நிலவழகி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்ததும் டிரைவர் லாரியை அங்கேயே லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் தொள்ளாமூர் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியை தடியாலும், கல்லாலும் அடித்து நொறுக்கி னர். லாரிக்கு தீ வைக்க முயன்றனர். இதனால் அங்கு பதற்றதும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் காட்டேரிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே என்ஜினீயரின் சொந்த ஊரான தொள்ளாமூரில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், வானூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.


Next Story