புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

வெயில் காரணமாக பகலில் வெறிச்சோடிய புதுவை கடற்கரை மாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் அலைமோதியது.

புதுச்சேரி

வெயில் காரணமாக பகலில் வெறிச்சோடிய புதுவை கடற்கரை மாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் அலைமோதியது.

தாவரவியல் பூங்கா

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

அதையொட்டி புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் நேற்று மாலை குவிந்தனார். பகலில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு வீட்டிற்குள் முடங்கிய மக்கள் மாலையில் குடும்பத்துடன் கடற்கரைக்கு பயணிக்க தொடங்கினர். அங்கு கடலில் குளித்தும், கரையில் முட்டி மோதிய அலையில் விளையாடியும் மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள்

அதுபோல வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் எடுத்து பகலில் ஓட்டலிலேயே முடங்கி கிடந்தனர். பிற்பகலுக்கு பின் வெளியில் செல்ல தொடங்கினர். பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவில் தஞ்சம் அடைந்து மர நிழலில் தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குழந்தைகள் தாவரவியல் பூங்காவில் உள்ள சிறுவர்கள் ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.

மாலையில் புதுச்சேரி கடற்கரை, சுண்ணாம்பாறு படகுகுழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடற்கரையில் உள்ள மணல் பரப்பிலும், கடலில் இறங்கியும் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர். இதே போல் பாண்டி மெரினா பீச்சிலும் குதிரை, ஒட்டகங்களில் ஏறி சவாரி செய்தனர்.

களை கட்டிய சண்டே மார்க்கெட்

புதுச்சேரி வந்த சுற்றுலா பயணிகள் நகரின் ஒயிட் டவுன் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் பொருட்கள் வாங்க இன்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புதுச்சேரியில் உள்ள நகர பகுதிகளில் வெளிநாட்டு பதிவெண்கள் கொண்ட வாகனங்களை அதிகம் காண முடிந்தது.


Next Story