ரெயில்வே கேட் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்


ரெயில்வே கேட் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
x

புதுவையில் ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் போலீசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரி

போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் ரெயில்வே கேட் பகுதியில் போலீசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்

புதுவையில் வாகன பெருக்கம், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

விடுமுறை நாட்களில் வெளியூர் சுற்றுலா பயணிகளை குறி வைத்து ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி அபராதம் விதிப்பதில் காட்டும் அக்கறையை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில் போலீசார் காட்டுவதில்லை என்றும் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். தற்போது போலீசார் உள்ளூர் மக்களுக்கும் அபராதம் விதிப்பதால் போலீசார் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

குறிப்பாக போலீசாரை எதிர்த்து கேள்வி கேட்கவும் துணிந்துவிட்டனர். இதனால் நாள்தோறும் ஆங்காங்கே பிரச்சினைகள் உருவாகி வருகிறது. இருந்தபோதிலும் போலீசார் போக்குவரத்து நெருக்கடியை போக்க அக்கறை காட்டவில்லை.

தனியார் பஸ்கள் அத்துமீறல்

குறிப்பாக புதுச்சேரி-கடலூர் சாலையில் முதலியார்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் கேட் திறந்ததும் செல்ல வேண்டும் என்பதற்காக எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் செல்லும் பாதையில் தனியார் பஸ்களை விதிகளை மீறி இயக்குவது தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற பஸ்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால் இப்போது மீண்டும் தனியார் பஸ்கள் பழைய முறையை கடைபிடிக்க தொடங்கிவிட்டன. இதனால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரெயில்வே கேட் பகுதியை கடக்க 15 நிமிடங்களுக்கும் மேலாகிறது. இதை தவிர்க்க ரெயில் வரும் நேரங்களில் அங்கு போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story