வரி செலுத்தாத காலி மனைகள் மதிப்பிழப்பு செய்யப்படும்

வரி செலுத்தாத காலி மனைகள் மதிப்பிழப்பு செய்யப்படும் என்று உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி
வரி செலுத்தாத காலி மனைகள் மதிப்பிழப்பு செய்யப்படும் என்று உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பில்லா காலிமனை
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் பெரும்பாலான விவசாய நிலங்கள் மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வீட்டுமனைகளாக உபயோகத்தில் உள்ளது. இதில் பெரும்பாலானவை காலியாகவே பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன.
இந்த மனைகளில் மழை தண்ணீர் தேங்குவதால் புதர் மண்டி கொசு மற்றும் விஷ ஜந்துகளால் அருகில் வசிப்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்காக காலிமனைகளின் உரிமையாளரை கண்டறிவது சவாலாக உள்ளது.
காலிமனை வரியை செலுத்தாமலும் உள்ளனர். எனவே, காலிமனை உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரியை செலுத்த வேண்டும். தங்கள் காலி வீட்டு மனைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மதிப்பிழப்பு
இவற்றை மீறினால் காலிமனைகளை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடியாதவாறு அந்த மனைகளின் பத்திர பதிவுகளில் அரசு வழிகாட்டி மதிப்பு இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
குடியிருப்பு நகர் சங்கங்கள், தங்கள் மனைபிரிவில் உள்ள காலிமனைகள் பற்றிய விவரங்களை உழவர்கரை நகராட்சிக்கு நேரடியாகவோ அல்லது வாட்ஸ்-அப் செயலி எண் 75891 71674 மூலமாகவோ தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






