தேடப்பட்ட வாலிபர் போலீசில் சரண்

புதுவையில் மரத்தில் மோதி என்ஜினீயர் பலியான வழக்கில் போலீசார் தேடிய வாலிபர் இன்று சரணடைந்தார்.
புதுச்சேரி
மரத்தில் மோதி என்ஜினீயர் பலியான வழக்கில் போலீசார் தேடிய வாலிபர் இன்று சரணடைந்தார்.
என்ஜினீயர் சாவு
புதுவை முத்துப்பிள்ளைபாளையத்தை சேர்ந்த என்ஜினீயர் விஷால் (வயது 26). கடந்த 7-ந்தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் லெபோர்தெனே வீதியில் வந்தபோது ரோட்டில் நின்றிருந்த கும்பலில் ஒருவர் அவரை அடிப்பதுபோல் கையை ஓங்கினார். அந்த நபரிடம் சிக்காமல் மோட்டார்சைக்கிளை ஓட்டிய விஷால், நிலை தடுமாறி ரோட்டோரம் நின்ற மரத்தில் மோதி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மது அருந்திவிட்டு பிறந்தநாள் கொண்டாடிய கும்பலால்தான் இந்த துயர சம்பவம் நடந்தது தெரியவந்தது.
வாலிபர் சரண்
அவர்கள் லெபோர்தெனே வீதியை சேர்ந்த கார்த்திக்சங்கர், மோனிஷா, குருசுக்குப்பத்தை சேர்ந்த நவீன்குமார், ஈஸ்வரன்கோவில் வீதியை சேர்ந்த அருண்தாஸ், முகேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களில் கார்த்திக்சங்கர், நவீன்குமார், சூரியகுமார், அருண்தாஸ் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் தலைமறைவான மோனிஷா மற்றும் முகேஷ் (வயது 25) ஆகியோரை பிடிக்கக்கோரி விஷாலின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். எனவே, போலீசார் 2 பேரையும் கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்ட முகேஷ் இன்று ஒதியஞ்சாலை போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.