லாரி மோதியதில் ஆற்றுக்குள் கார் பாய்ந்தது


லாரி மோதியதில் ஆற்றுக்குள் கார் பாய்ந்தது
x

திருநள்ளாறு அருகே லாரி மோதியதில் கார் ஆற்றுக்குள் பாய்ந்தது. தம்பதி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோட்டுச்சேரி

திருநள்ளாறு அருகே லாரி மோதியதில் கார் ஆற்றுக்குள் பாய்ந்தது. தம்பதி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

கார்-லாரி மோதல்

திருவாரூர் மாவட்டம் நல்லமாங்குடியை சேர்ந்தவர் சேகர் (வயது 61). இவர் தனது மனைவி ஜெயலட்சுமி (55), அவரது தங்கை சரோஜா (50) ஆகியோருடன் காரைக்காலுக்கு காரில் சென்றார். காரை நன்னிலத்தை அடுத்த பால்பண்ணைசேரியைச் சேர்ந்த ஞானபாஸ்கரன் (33) என்பவர் ஓட்டினார்.

பின்னர் காரைக்காலில் உறவினர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பினர். காரைக்காலை அடுத்த பச்சூர் அருகே சென்றபோது, திருநள்ளாறில் இருந்து லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.

4 பேர் உயிர் தப்பினர்

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நூலாற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த சேகர், அவரது மனைவி ஜெயலட்சுமி உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கடலூரை சேர்ந்த அஜித் (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திரு-பட்டினம் வடக்கு வாஞ்சூர் அமிர்தா நகரைச் சேர்ந்தவர் சிவராஜபூபதி (46). அவரது மனைவி விஜயலட்சுமி (40). இருவரும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தனர். திரு-பட்டினம் பிராவடையான் ஆற்றுப் பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story