12 மணிநேர வேலையை ஆதரிப்பது ஏன்?


12 மணிநேர வேலையை ஆதரிப்பது ஏன்?
x

புதுவையில் தொழிலாளர்களின் 12 மணிநேர வேலையை ஆதரிப்பது ஏன்? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி

தொழிலாளர்களின் 12 மணிநேர வேலையை ஆதரிப்பது ஏன்? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் நலன்

தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலை தொடர்பான சட்ட திருத்த மசோதாவுக்கு நான் ஆதரவு தெரிவித்த கருத்துகளின் பின்னணியை புரிந்துகொள்ளாமல் சிலர் விமர்சனம் செய்கின்றனர். எந்த ஒரு திட்டத்தையும் அது பலன்தரக்கூடிய பண்புகளை ஆராய்ந்த பிறகு அதிக நன்மை பயக்கும் நிலையில் அதனை ஆதரிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. தொழிலாளர் நலனையும், தொழில் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே நான் இந்த மசோதாவிற்கு ஆதரவு கருத்து தெரிவித்து வருகிறேன்.

கொரோனாவுக்கு பிறகு வளர்ந்த நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்தபோது பிரதமர் மோடி வழிகாட்டுதலோடு இந்தியா அதிலிருந்து மீண்டு எழுந்து வந்துள்ளது. மாறிவரும் இன்றைய பொருளாதார சூழலில் பொருளாதார வல்லரசாக உருவெடுத்து வரும் இந்திய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த 12 மணிநேர வேலை மசோதா உதவி புரியும்.

கட்டாயப்படுத்த வேண்டியதில்லை

இந்த 12 மணிநேர வேலை திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு கர்நாடகா மற்றும் டெல்லியில் நடைமுறையில் இருந்து வருகிறது. பல நாடுகளிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 12 மணிநேர வேலை மசோதா விவகாரத்தை தொழிலாளர்களின் விருப்பத்துக்கு விட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. வேலை நேரத்தை அதிகப்படுத்தும்போது ஓய்வுநேரத்தையும் அதிகப்படுத்த முடியும் என்பது உண்மை. மருத்துவ ரீதியாக அதற்கான பல்வேறு ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது.

அதிகப்படியான நேரம் ஓய்வெடுப்பதால் மீண்டும் பணிக்கு திரும்பும்போது தொழிலாளர்களின் செயல்வேகம் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. தொழில் மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் தொழிலாளர்களின் ஒப்புதலோடு இதுபோன்ற மாற்றங்களை படிப்படியாக கொண்டு வரவேண்டும்.

புரிந்துகொள்ள வேண்டும்

மாற்று கருத்துகள் இருந்தால் அவற்றை ஆராய்ந்து அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசுகள் நடந்துகொள்ள வேண்டும். ஊழியர்கள் பணிபுரியும் நேரம் 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கப்படுகிறதே தவிர ஊழியர்களின் ஒட்டுமொத்த பணிநேரம் அதிகரிக்கப்படவில்லை. 6 நாட்களில் 8 மணிநேர பணியில் மொத்தம் 48 மணிநேரம் உழைக்கும் தொழிலாளர்கள் 12 மணிநேர வேலையில் அதனை 4 நாட்களில் செய்து முடிக்கலாம்.

குடும்ப வருவாயை பெருக்கிகொள்ள நினைக்கும் ஊழியர்கள் 3 நாட்களில் தாங்கள் பொருளீட்டுவதற்கான வாய்ப்புகளாக வேறு விதமாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிலாளர்கள் சட்டங்களின் மூலமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எந்தவிதமான சலுகைகளும் பறிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ மாட்டாது என்பதை உணர்ந்தே எனது கருத்தை முன்வைக்கிறேன். என்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை எதிர் கருத்துகளை முன்வைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story