போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்

காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
காரைக்கால்
காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கூட்டம்
காரைக்கால் பாரதியார் சாலையில் கோவில்பத்து அருகே புதிய பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய பஸ்நிலையம் அருகில் பாரதியார் சாலை மற்றும் பி.கே சாலை சந்திப்பில் சிக்னல்கள் உள்ளன. இந்த பகுதியை சுற்றி ஓட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஏராளமானவை இருக்கின்றன. இங்கு பொதுமக்கள் கூட்டம் எப்போதும் காணப்படும்.
போக்குவரத்து நெரிசல்
இந்த கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சிக்னல் அருகிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
சிக்னல் பகுதி என்பதால் ஒரு சில இடங்களில் 'பிரீலெப்ட்' இருந்தும் செல்ல முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே புதிய பஸ் நிலையம் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.






