ஜிப்மர் ஊழியர் கொலையில் வாலிபர் அதிரடி கைது


ஜிப்மர் ஊழியர் கொலையில் வாலிபர் அதிரடி கைது
x

வில்லியனூர் அருகே நடந்த ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பெண் தர மறுத்ததால் அவரை அடித்து கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே நடந்த ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பெண் தர மறுத்ததால் அவரை அடித்து கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண் அடித்து கொலை

வில்லியனூர் அருகே அரியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம், இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 45). ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 3-ந் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு அரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் கோவிந்தம்மாளின் பின்பக்க தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

2 பேரிடம் விசாரணை

இதுதொடர்பாக கோவிந்தம்மாள் மகன் அருண்குமார் (25) அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோவிந்தம்மாள் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தினர்.

கொலையாளிகளை பிடிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கோவிந்தம்மாள் வீட்டின் அருகில் வசிக்கும் சதீஷ் (26) உள்பட 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

பெண் தர மறுப்பு

விசாரணையின் கோவிந்தம்மாளை சதீஷ் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுபற்றி அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக கோவிந்தம்மாள் மகளை ஒருதலையாக சதீஷ் காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்ய விரும்பிய சதீஷ், கோவிந்தம்மாளிடம் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் சதீஷ் கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் பெண் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோவிந்தம்மாள் மீது சதீஷ் கோபத்தில் இருந்துள்ளார்.

அடித்து கொலை

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த சதீஷ், கோவிந்தம்மாளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக அவரை எதிர்பார்த்து அரியூர் பஸ் நிறுத்தம் பகுதியில் பதுங்கி இருந்துள்ளார்.

பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற கோவிந்தம்மாளை, சதீஷ் பின்தொடர்ந்து சென்று, தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனக்கு ஒன்றும் தெரியாதது போல் சதீஷ் நாடகமாடியுள்ளார்.

சதீஷ் ஒருவர் மட்டுமே இந்த கொலையில் ஈடுபட்டாரா?, அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story