நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும் 'ராமல்'புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்


நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும் ராமல்புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 25 May 2024 4:02 AM IST (Updated: 25 May 2024 9:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருந்தது. அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'ராமெல்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்த புயல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக இன்று (சனிக்கிழமை) இரவு வலுவடைய இருக்கிறது. அதன் பின்னர், நாளை நள்ளிரவில் சாகர் தீவு - கேபுபாரா இடையே வங்கதேசம், மேற்கு வங்கத்தை ஒட்டிய கடற்கரைகளை புயல் கரைய கடக்க அதிக வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 -120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.


கோடை காலமான தற்போது கத்திரி வெயிலின் தாக்கம் இருந்து வந்தாலும், கடந்த 2 வாரங்களாக கோடை மழை தமிழ்நாட்டில் பரவலாக பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த புயலால், வெப்பநிலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வகையில் கத்திரி வெயிலின் நிறைவு பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவுவதாகவும், இதனால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 30-ந் தேதி (வியாழக்கிழமை) வரை லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

1 More update

Next Story