மும்பை போலீஸ் சீருடையில் பேசி பணம் பறிக்கும் கும்பல்- சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை


மும்பை போலீஸ் சீருடையில் பேசி பணம் பறிக்கும் கும்பல்- சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 May 2024 9:39 AM GMT (Updated: 23 May 2024 11:20 AM GMT)

போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக மிரட்டி, மும்பை போலீஸ் சீருடையில் பேசி பணம் பறிக்கும் மோசடி செயல் அரங்கேறி வருவதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை,

இந்தியாவில் 'டிஜிட்டல்' தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 'சைபர்' குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. மக்களை எப்படி ஏமாற்றலாம்? என்று சைபர் குற்றவாளிகள் 'ரூம்' போட்டு யோசித்து, புதிய வகை மோசடி செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அதிர வைக்கும் புதிய மோசடி தலை தூக்கி உள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த மோசடி எப்படி நடக்கிறது என்பதை பார்ப்போம்.

செல்போனில் அழைக்கும் நபர், நான் 'கூரியர்' நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். உங்கள் பெயரில் மும்பை அந்தேரியில் இருந்து தைவான் நாட்டுக்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 கிலோ கஞ்சா, பல லட்சம் டாலர் பணம், புலித்தோல், போதைப்பொருட்கள், 10 போலி பாஸ்போர்ட்டுகள், 20 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவை இருக்கிறது. இதுதொடர்பாக மும்பை 'சைபர் கிரைம்' போலீசார் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க இருக்கிறார்கள். எனவே இணைப்பை துண்டிக்காமல் லைனில் இருங்கள் என்று கூறுவார்.

அதிர்ச்சியுடன் பார்சல் எதுவும் அனுப்பவில்லை என்று கூறும்போது, நான் மும்பை 'சைபர் கிரைம்' போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் என்ற குரல் கேட்கும் (பின்னால் போலீஸ் 'வாக்கி-டாக்கி' சத்தம் ஒலிக்கும்). அவர், உங்கள் ஆதார் எண்ணை கேட்பார். பதற்றத்தில் ஆதார் எண்ணை சொன்னவுடன், மற்றொரு அதிர்ச்சி தகவலை உங்கள் தலையில் இறக்குவார்கள்.

இந்த ஆதார் எண் மூலம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 120 வங்கி கணக்குகள் தொடங்கி, ரூ.1,000 கோடி 'ஹவாலா' பணம் பெறப்பட்டுள்ளது என்று கூறுவார். எங்கள் மாநில போலீசார் உங்கள் வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைது செய்வோம் என்று அச்சுறுத்துவார்.

இதனால் பயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, 'எங்கள் உயர் அதிகாரி உங்களிடம் விசாரணை நடத்துவார். உங்கள் செல்போனில் 'ஸ்கைப்' செயலியை (வீடியோ கால்) பதவிறக்கம் செய்து, அதன் ஐ.டி. எண்ணை எங்களுக்கு அனுப்ப வேண்டும். விசாரணை முடியும் வரை நீங்கள் யாரையும் போனிலோ, நேரடியாகவோ தொடர்புகொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதிப்பார். இந்த செயலி மூலம் கைது 'வாரண்டு' (போலியாக தயாரிக்கப்பட்டவை) போன்ற உத்தரவுகளை அனுப்பிவைப்பார்கள்.

பின்னர் இந்த செயலி வழியாக வீடியோ மூலம் போலீஸ் உடையில் அதிகாரி தோரணையில் ஒருவர் பேசுவார். உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். எனவே இந்த பணத்தை நாங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள் என்று சொல்வார்.

அவர்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிட்டு, எந்த பிரச்சினையும் வராதுல... என்று கேட்கும் போது, அந்த நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விடுவார். பணம் அவர்கள் வங்கி கணக்கிற்கு சென்றவுடன் 'ஸ்கைப்' செயலியில் அனுப்பிய அனைத்து தகவல்கள் மற்றும் தடயங்களும் அழிக்கப்பட்டு இருக்கும்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தனியாக வசிக்கும் வயதானவர்கள், அதிக வருமானம் உள்ள நபர்கள், பெண்களை குறி வைத்து இந்த மோசடி நடைபெற்று வருவதாக 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தங்களை போலீஸ் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக அடையாளம் தெரியாத நபர்களின் பெயரில் வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்களை பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கொண்டு பொதுமக்களை ஏமாற்றி வருவதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

எந்தவொரு 'சைபர் கிரைம்' போலீசாரோ, சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி, அமலாக்கத்துறை, பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போன்ற போலீஸ் விசாரணை அமைப்புகளை சேர்ந்த போலீசாரோ 'ஸ்கைப்' செயலிகள் மூலமாகவோ அல்லது வீடியோ கால் மூலமாகவோ பொதுமக்களை விசாரணை செய்ய மாட்டார்கள்.

அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர்களிடம் பேசும்போது, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபர்களிடம் தனிப்பட்ட வங்கி சார்ந்த மற்றும் பிற தகவல்களை தெரிவிக்கக்கூடாது. அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். இது போன்ற சைபர் மோசடி கும்பல் தொடர்புகொண்டால் உடனடியாக 'சைபர் கிரைம்' உதவி எண் 1930-க்கு புகாரை தெரிவிக்கலாம். https://cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story