விஷ சாராய விவகாரம்: கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


விஷ சாராய விவகாரம்: கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Jun 2024 10:29 AM IST (Updated: 20 Jun 2024 11:03 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர்.

நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கருணாபுரத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

விஷ சாராய விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டி.ஜி.பி., உளவுத்துறை டி.ஜி.பி., மதுவிலக்கு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக முதல்-அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து அவர் கள்ளக்கறிச்சி செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story