செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.
சென்னை,
* கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்தார். பின்னர் அவர் பகவதி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து படகில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று தியானம் மேற்கொண்டார்.
* டெல்லியில் பீகாரை சேர்ந்த 25 வயது பெண்ணை கற்பழித்து அவரிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்து சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாபில் உள்ள தனது கணவரை பார்க்க ரெயிலில் சென்றபோது டெல்லியில் இறங்கி பொருட்கள் வாங்க சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
* புதுக்கோட்டை மாவட்டம் வைரவன்பட்டியில் உள்ள காலபைரவர் கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தனது மனைவியுடன் வந்து சாமிகும்பிட்டார். இதற்காக அவர் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்தார். சாமி தரிசனம் முடிந்ததும் அவர் மீண்டும் திருச்சியில் இருந்து விமானத்தில் சென்றார்.
*மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அதில் ஒன்று வழக்கமான ஜாமீன் மனு, மற்றொன்று மருத்துவ பரிசோதனைக்காக 7 நாள் இடைக்கால ஜாமீன் கேட்டும் ஆகும். இதற்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
*காஷ்மீர் மாநிலம் ஜம்மு-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் அரியானாவை சேர்ந்த பக்தர்கள் சென்ற பஸ் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர்.
*நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் பிரதமர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
*இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். அதிக எம்.பி.க்களை பெறும் கட்சிக்கே தலைமை பதவி வழங்குவது இயற்கை என்றும் அவர் தெரிவித்தார்.
*கேரளாவில் பருவ மழை இன்று தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுபோல வடகிழக்கு மாநிலங்களிலும் பருவமழை தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மணிப்பூரில் மழை வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
*ஈரான் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. 5 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளராக மனு தாக்கல் செய்பவர் 45 முதல் 75 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். முதுநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
*தங்கம் கடத்தி வந்ததாக காங்கிரஸ் எம்.பி.சசிதரூரின் முன்னாள் உதவியாளர் டெல்லி விமான நிலையத்தில் இன்று பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த சசிதரூர் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்றார்.
*நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்று ஓய்வடைவதால் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி பஞ்சாபில் பிரசாரம் மேற்கொண்டார். கடைசி கட்ட தேர்தல் 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் நடைபெறுகிறது.
*இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025-ம் ஆண்டு 7 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
*சீனா- அரபு நாடுகள் இடையேயான உச்சிமாநாடு இன்று பெய்ஜிங்கில் தொடங்கியது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், மற்றும் பக்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட், துனிஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
*20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதுகிறது.ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டிக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.