விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்:  தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2024 8:19 AM GMT (Updated: 12 Jun 2024 1:12 AM GMT)

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி மறைவையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து, மத்தியமந்திரி சபை பதவி ஏற்றுவிட்டது.இதற்கிடையே நாடு முழுவதும் 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியதேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்தது.இந்த 13 தொகுதிகளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியும் ஒன்று.

இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக (தி.மு.க.) இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறதுதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

ஆளுங்கட்சியான தி.மு.க., மற்ற கட்சி வேட்பாளர்கள் யார்? என்பதை எதிர்பாராமல், முதலாவதாக நேற்று வேட்பாளரை அறிவித்துவிட்டது.அக்கட்சி வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வருகிற 10-7-2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா (விவசாயத் தொழிலாளர் அணி செயலாளர்) போட்டியிடுவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யார் இவர்?

தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பி.ஏ. படித்துள்ளார். இவரது சொந்த ஊர் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னியூர் ஆகும்.தற்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் பின்புறம் உள்ள வி.ஏ.ஓ. நகரில் வசித்து வருகிறார். இவர், கடந்த 1987-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்தார். 1988-ல் தபால் நிலையங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று கைதாகி சிறைவாசம் சென்றார். பின்னர் 1989-ல் விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், 1996-ம் ஆண்டு அன்னியூர் கூட்டுறவு வங்கி தலைவராகவும், 2003-ம் ஆண்டு ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினராகவும், 2020-ம் ஆண்டு முதல் மாநில விவசாய அணி துணைச் செயலாளராகவும், 2022-ம் ஆண்டு முதல் தற்போது வரை மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் பொறுப்பிலும் உள்ளார்.

முதல்முறை போட்டி

இவர் இதுவரை உள்ளாட்சி தேர்தல் உள்பட மக்களால் தேர்வு செய்யப்படும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாமல், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக போட்டியிடுகிறார்.இவருக்கு வனிதா என்ற மனைவியும், அர்ஷிதா சுடர் என்ற மகளும், திரிலோக் ஹரி என்ற மகனும் உள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் யார்?

ஆளும்கட்சி வேட்பாளரை அறிவித்து தேர்தல் வேலையை தொடங்கி விட்டது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.அந்த கட்சி சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. களம் இறங்க தயாராகி வருகிறது. நாம் தமிழர் கட்சியும் தனது வேட்பாளரை விக்கிரவாண்டியில் நிறுத்துகிறது. இதன் மூலம் 4 முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.


Next Story