வண்டலூர் பூங்காவுக்கு கடந்த 18 நாட்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வருகை - பூங்கா நிர்வாகம் தகவல்

கோப்புப்படம்
காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் 26 ஆயிரத்து 866 பேர் வண்டலூர் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 1,700-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 200 பேர் வருகை தந்தனர். பொங்கல் பண்டிகை அன்று 14 ஆயிரத்து 570 பேரும், மாட்டுப்பொங்கல் அன்று 22 ஆயிரத்து 205 பேரும், காணும் பொங்கல் அன்று 26 ஆயிரத்து 866 பேரும் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த 18 நாட்களில் மட்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வருகை தந்து பூங்காவில் உள்ள மனித குரங்கு, வெள்ளை புலிகள், யானைகள், நீர்யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்து ரசித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






