கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழப்பு

கோப்புப்படம்
கோவையில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த துடியலூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி மைதிலி. இவர்களது மகன் கிருத்திக் (14 வயது). 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பு செல்கிறான். இவன், கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தான்.
அந்த பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் மாலை 2 அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஒரு அணியில் பங்கேற்று கிருத்திக் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தான். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கிருத்திக்கை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் கிருத்திக் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






