பெண்ணை தாக்கி 15 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை - முகமூடி ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

புதுக்கோட்டை அருகே பெண்ணை தாக்கி 15 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலு. கொத்தனார். இவரது மனைவி லட்சுமி (52 வயது). நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் லட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் 5 பேர் மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டின் பின்வாசல் வழியாக புகுந்தனர்.
பின்னர் லட்சுமியை தாக்கிய அவர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மூக்குத்தி, தோடு என 6 பவுன் நகைகள் மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் நகைகள் என மொத்தம் 15 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து வீடு திரும்பிய பாலுவிடம், லட்சுமி நடந்ததை கூறியுள்ளார். உடனடியாக இதுகுறித்து பாலு கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
மோப்ப நாய் புறவழிச்சாலை வழியாக ஓடிச் சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கீரனூர் போலீசார் பெண்ணை தாக்கி 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






