விரைவில் 3.38 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி - அமைச்சர் தகவல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (12.12.2025) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உலக எய்ட்ஸ் தினம் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று, எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டு, விழிப்புணர்வு குறும்படத்திற்கான குறுந்தகடு வெளியிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ் எச்ஐவி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சேவை பணியில் சிறந்து விளங்கிய மருத்துவமனைகளுக்கு, சிகிச்சை மையங்களுக்கு, மருத்துவர்களுக்கு, தன்னார்வலர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மக்களிடையே எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் (Overcoming disruption, transforming the AIDS response”) “இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல்“ எனும் தலைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. 2030க்குள் எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத வகையில் தமிழ்நாட்டை மாற்றுகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, தனி கவனம் செலுத்தப்பட்டு புதிய எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் மாநில அரசு - அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து எச்ஐவி தடுப்பு பணியினை திறம்பட செய்து வருகிறது.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் எச்ஐவி தொற்றின் தாக்கம் மிக மிக குறைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்தியாவின் எச்ஐவி பாதிப்பு என்பது 0.23 சதவீதம் ஆக இருந்து வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் எச்ஐவி பாதிப்பு என்பது 0.16 சதவீதம் ஆக இருந்து வருகிறது. தமிழ்நாடு தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக 100 சதவீதம் கருவுற்ற தாய்மார்களுக்கு எச்ஐவி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.
எச்ஐவி தொற்றை கண்டறிய 2600 நம்பிக்கை மையங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்கு 81 இடங்களில் கூட்டு மருத்துவ சிகிச்சை முறைகள் மையங்கள் செயல்பட்டு வருகிறது. 172 இடங்களில் இணை கூட்டு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. எச்ஐவி பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மூலம் பிறக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி/எய்ட்ஸ் தொற்று நீக்கத்தின்படி (ARV) ஏ.ஆர்.வி. தடுப்பு மருந்தும், பிறப்பு முதல் 6 அல்லது 12 வாரம் வரை Nevirapine (அ) Zidovudine சொட்டு மருந்து (அ) இரண்டும் இணைந்த இரட்டை தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த தன்னார்வ பரிசோதனை முகாம்கள் (Integrated Health Campaign) ஏற்படுத்தி, எச்.ஐ.வி தொடர் சங்கிலி தொற்றினை கண்காணித்து (Index Case Finding and Testing) எச்.ஐ.வி தொற்றுள்ளோரின் பாலியல் பங்காளர்கள், அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீவிர பரிசோதனை முகாம்கள் (Index testing campaign) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகுகளின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞர் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி தொற்று பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு வைப்பு நிதியுடன் கூடிய அறக்கட்டளை தொடங்குவதற்கு 2009இல் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். அது தற்போது ரூ.29 கோடியாக உயர்வு பெற்றிருக்கிறது. முதல்-அமைச்சர் கடந்த நிதிநிலை அறிக்கையில் இந்த துறையில் எச்ஐவி/எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய
ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு என்று மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தை அறிவிக்க அறிவுறுத்தினார்கள். அந்தவகையில் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக மாதந்தோறும் 7,618 குழந்தைகளுக்கு ரூ.1,000/- வழங்கும் திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக மக்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் 584 கல்லூரிகளிலிருந்து 14,878 மாணவ, மாணவியர்கள் இணையத்தின் வாயிலாக நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். இப்படி பல திட்டங்கள் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் சித்தாமாரி என்று சொல்லக்கூடிய மாவட்டத்தில் நேபாளத்தை ஒட்டி இருக்கின்ற மாவட்டம். ஆன்மீக நிகழ்ச்சியின் வாயிலாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை நெற்றியில் கத்தியினைக் கொண்டு ரத்தம் வழிய ஒரு கீரலை போடுவதாக சொல்கிறார்கள். அது அவர்களுடைய நம்பிக்கை சார்ந்தது. அதில் நாம் பெரிய அளவில் விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்றாலும் ஒரே கத்தியில் பல பேருக்கு நெற்றியில் கோடு போடுவது மூலம் ஒரு மாவட்டத்தில் மட்டும் 7500 பேர் எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.
அதில் குழந்தைகள் 400 பேரும்கூட அடங்குவர். இதுபோன்ற செயல்கள் மூலம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்கள் ஏதாவது ஏற்படுவது தொடர்பாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னாள் ரத்த ஓவியம் வரைகின்ற 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தனியார் கடைகள் மூலம் இல்லாமல் வீடுகளில் செய்கிறார்களா என்று கண்காணிக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஊசிகளை எப்படி கையாள்வது போன்ற பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வரும் காரணத்தினால்தான் இந்தியாவிற்கான பாதிப்பு சதவிகிதத்தில் இருந்து தமிழ்நாடு குறைந்த அளவிலான பாதிப்புகள் இருந்துக் கொண்டிருக்கிறது என்றாலும், இதில் பூஜ்ஜியம் என்கின்ற வகையில் 2030ஆம் ஆண்டிற்குள் எட்டுவது என்கின்ற நடவடிக்கை இந்த அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.
(Human Papilloma Virus) தடுப்பூசி திட்டம் தொடர்பான கேள்விக்கு
இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, கடந்த நிதி நிலை அறிக்கையின்போது நமது முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் (HPV) வைரஸ் தடுப்பூசி 9 வயது முதல் 14 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுப்பதற்கு இந்த தடுப்பூசி போடும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்கள். இது தொடர்பாக ஒப்பந்தப்பணி முடிவடையும் தருவாயில் இருக்கின்றது.
இந்த டெண்டர் முடிவடைந்தவுடன் HPV தடுப்பூசி பெறப்பட்டு எப்படி உபயோகப்படுத்துவது தொடர்பாக பயிற்சி இந்த வாரம் முதல் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் இது செயல்படுத்தப்பட உள்ளது என்றாலும், தொடக்கமாக அதிகமான கருப்பைவாய் புற்றுநோய் அதிகமாக உள்ள மாவட்டங்கள் என்று கண்டறியப்பட்டிருப்பது அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகும். இந்த 4 மாவட்டங்களில் அடுத்த மாதம் உடனடியாக இந்த பணி தொடங்கப்படவிருக்கிறது. ரூ.36 கோடி செலவிலான இந்த HPV தடுப்பூசி திட்டத்தை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக இலவசமாக தொடங்குகிறோம்.
உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்புதான் கருப்பைவாய் புற்றுநோய்களுக்கு காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் நாம் இலவசமாக இந்த திட்டத்தை தொடங்குகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடுவதற்கு ரூ.2,000/- வரை செலவாகும். ஒருவருக்கு இரண்டு தடுப்பூசி என்கின்ற வகையில் வழங்கப்படவிருக்கிறது. இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பள்ளிகளில் பயிலும் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படவிருக்கிறது என்றாலும் தொடக்கமாக அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசிற்கு ஒரு கோரிக்கை. கோவிட் காலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கோவிட் தடுப்பூசி போட ரூ.100 கோடி வரை வழங்கி தடுப்பூசி வழங்கினோம். இதன்காரணமாக மத்திய அரசு ஒட்டுமொத்தமாக கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கி இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தினார்கள். அதுபோல் நாம் HPV தடுப்பூசி திட்டத்தை இலவசமாக வழங்க உள்ளோம். மத்திய அரசு இந்தியா முழுமைக்கும் இந்த
திட்டத்தை கொண்டு வந்தால் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளும் இதில் பலன் பெறுவார்கள். இந்த தடுப்பூசி மூலம் 3,38,000 பெண் குழந்தைகள் இதில் பலன் பெற உள்ளார்கள். முதல் தவணையாக 4 மாவட்டங்களில் 27,000 குழந்தைகள் பயன்பெற உள்ளார்கள் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் ஆர்.சீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் திலகம் மற்றும் மருத்துவத்துறை பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






