தமிழ்நாட்டில் 254 இடங்களில் புதிய செல்போன் டவர்கள்: பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் தகவல்

நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ‘4 ஜி' சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ‘4 ஜி' சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் இந்த சேவை தொடர்பாக பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் எஸ்.பார்த்திபன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டிஜிட்டல் பாரத் நிதியத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு ‘4 ஜி' சேவைகள் வழங்கப்படும். சர்வதேச சேவை கடமை நிதி உதவியுடன் ‘4 ஜி' சேவையை வழங்குவதற்கு தமிழ்நாட்டில் 620 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி அன்று ரூ.245 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 188 வருவாய் கிராமங்களிலும், வன பகுதிகளில் உள்ள 21 கிராமங்களிலும் 209 இடங்களில் ‘4 ஜி’ செல்போன் டவர்கள் நிறுவப்பட இருக்கின்றன. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள செல்போன் டவர்கள் ‘4 ஜி' சேவை வழங்குவதற்கு தரம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 254 புதிய ‘4 ஜி' செல்போன் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள டவர்களை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறுவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






