ஆம்பூரில் 8 வயது சிறுமி மாயம்; மாந்திரீகம் செய்வதற்காக கடத்தப்பட்டாரா? - பொதுமக்கள் அச்சம்

குடுகுடுப்பைக்காரர்கள் 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் ஊராட்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபு என்பவரி 2-வது மகள் தனஸ்ரீ(வயது 8). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை தனஸ்ரீ வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.
ஆனால் காலை 10 மணியளவில் பள்ளி நிர்வாகத்தினர் தனஸ்ரீயின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்களின் மகள் பள்ளிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாபு அக்கம்பக்கத்தில் தனது மகளை தேடி அலைந்துள்ளார். இருப்பினும் தனஸ்ரீ குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் சிறுமி மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கோவிந்தாபுரத்திற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, இன்று காலை அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் குடுகுடுப்பைக்காரர்கள் 3 பேர் சுற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் மாந்திரீகம் செய்வதற்காக சிறுமி கடத்தப்பட்டாரா? என பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், குடுகுடுப்பைக்காரர்கள் 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






