சாத்தனூர் அணையில் இருந்து 9 ஆயிரம் கன‌அடி நீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


சாத்தனூர் அணையில் இருந்து 9 ஆயிரம் கன‌அடி நீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x

சாத்தனூர் அணையில் இருந்து 9 ஆயிரம் கன‌அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேலும் திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை கொண்டு அணையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து உயரத் தொடங்கியது. வினாடிக்கு 6,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி தேக்கி வைக்கப்படும் நீரின் அளவை 111.80 அடியாக குறைத்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரை 12 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொமந்தான்மேடு, சித்தேரி அணைக்கட்டு தரைப் பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம், தரை பாலங்களை கடக்க வேண்டாம் என்றும் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story