எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் இன்று வரை 94.74 சதவீத படிவங்கள் விநியோகம் - தேர்தல் ஆணையம்

83.45 லட்சம் படிவங்கள் நிரப்பப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணி 4.11.2025 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் உள்ள எந்த ஒரு வாக்காளரும் விடுபடாத வகையில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியில் பயிற்சி அளிக்கப்பட்ட 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, கணக்கீட்டு படிவங்களை வழங்குவதற்கும், வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, தகுந்த விவரங்களை வழங்குவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை திரும்ப பெறுவதற்கும் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது வாக்குச்சாவடி பாகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே அச்சிடப்பட்ட 2 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி அதனை பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட பயிற்சியின்படி உதவி வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவத்தினை பெற்று கொண்டதற்கான ஒப்புகையினை மற்றொரு படிவத்தில் வழங்கி வாக்காளரிடம் அதனை வழங்கு வருகிறார்கள். இப்படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய அலைபேசி செயலி (BLO App) மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று வரை 6.07 கோடி பேருக்கு (94.74 சதவீதம்) வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட 13.02 சதவீத விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 83.45 லட்சம் படிவங்கள் நிரப்பப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






