பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும்; சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்

விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காக்கும் பயிர்க் காப்பீட்டில் அலட்சியம் காட்டுவது ஏன்? என நயினார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-
இயற்கை சீற்றத்தின் போது தனி விவசாயியின் நிலத்தில் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், வன விலங்குகளால் பயிர்ச் சேதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கக்கூடிய வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 57-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சரே?
மேடைதோறும் "பச்சை துண்டு போடும் போலி விவசாயி நானல்ல" என விவசாயிகளின் காவலர் போல முன்னிறுத்திக் கொள்ளும் நீங்கள், விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காக்கும் பயிர்க் காப்பீட்டில் அலட்சியம் காட்டுவது ஏன்? நமது பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பையும் வகைப்படுத்தி, காப்பீடு வழங்கும் வேளையில், தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? தங்களது அலட்சியத்தால் தமிழகத்தில் நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு என மாவட்ட வித்தியாசமின்றி பல இடங்களில் விவசாய நிலங்கள் வனவிலங்குகளால் சூறையாடப்படுவதும், அதைத் தடுக்க மின்வேலி அமைக்க முயன்று, விவசாயிகள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது.
கொடுத்த வாக்குறுதியை வீசியெறிந்து, உழவர்கள் வயிற்றிலடித்து அவர்கள் வாழ்வோடு விளையாடும் திமுக அரசு என்னும் கள்ளிச் செடியை விரைவில் களைந்தெறிவர் விவசாயப் பெருமக்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






