வங்கக்கடலில் 6-ம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி


வங்கக்கடலில் 6-ம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
x
தினத்தந்தி 2 Jan 2026 9:35 AM IST (Updated: 2 Jan 2026 9:38 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ஆகும். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. 'டிட்வா' புயல் காரணமாக டெல்டா, வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையில் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 3% சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இருப்பினும் லட்சதீவு-குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல நாளையும் (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுபகுதியால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு குறைவு எனவும் புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story