வடமாநில புலம்பெயர் தொழிலாளி மீது கஞ்சா போதையில் கொடூரத் தாக்குதல் - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்


வடமாநில புலம்பெயர் தொழிலாளி மீது கஞ்சா போதையில் கொடூரத் தாக்குதல் - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
x
தினத்தந்தி 29 Dec 2025 3:25 PM IST (Updated: 29 Dec 2025 3:25 PM IST)
t-max-icont-min-icon

இத்தகைய கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அபுபக்கர் சித்திக் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரெயில் நிலையம் அருகே, வடமாநில புலம்பெயர் தொழிலாளிக்கு நேர்ந்த மிகக்கொடூரமான தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியடையச் செய்கிறது. சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயிலில் பயணித்த வடமாநில புலம்பெயர் தொழிலாளியான சுராஜ் என்ற அந்த இளைஞர் மீது, திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் ஏறிய நான்கு சிறுவர்கள் (வயது 17) கஞ்சா போதையில் ஆயுதங்களை கழுத்தில் வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதனை எதிர்த்த இளைஞரை ரெயிலில் இருந்து இறக்கி, திருத்தணி ரெயில் நிலையம் அருகே தனிமையான இடத்தில் அழைத்துச் சென்று அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை அவர்களே வீடியோவாகப் பதிவு செய்து, வெற்றி சின்னம் காண்பித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இது அவர்களின் குரூர எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

அவ்வழியாக சென்ற பயணிகள் சிலர் அளித்த புகாரின் பேரில், அங்கு விரைந்த போலீசாரால், படுகாயமடைந்த புலம்பெயர் தொழிலாளியான அந்த இளைஞர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் வைரலான வீடியோக்களின் அடிப்படையில் நான்கு சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசையாலும், போதைப்பொருளின் தாக்கத்திலும் இத்தகைய கொடூர வன்முறையில் ஈடுபட்டது சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இவர்கள் சிறுவர்களாக இருந்த போதிலும், கடுகளவும் அச்சமோ, ஈவு இரக்கமோ இன்றி நிகழ்த்திய இவ்வன்முறை சட்டத்தின் முன் கடும் குற்றமாகும். சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் இருந்தாலும், இத்தகைய கொலைவெறித் தாக்குதலுக்கு உரிய கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வடமாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தமிழகத்திலும் அரங்கேறுவது போல் தெரிகிறது. இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்; இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மேலும், போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களிடையே பரவுவதைத் தடுக்கவும், சமூக வலைதளங்களில் வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசையும், காவல்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை போன்ற இடங்களில் ரெயில் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான இதுபோன்ற ரீல்ஸ் மோக நடவடிக்கைகளும், சாகச நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஆகவே, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், இதுபோன்ற குற்றங்களை தடுக்கவும் ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளியான சுராஜிற்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதோடு, உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story