ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜராஜ சோழன் காலத்து நாணயம் - அரசுப் பள்ளி மாணவன் கண்டெடுத்தான்


ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜராஜ சோழன் காலத்து நாணயம் - அரசுப் பள்ளி மாணவன் கண்டெடுத்தான்
x
தினத்தந்தி 17 Dec 2025 9:11 PM IST (Updated: 17 Dec 2025 9:19 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே அரசுப் பள்ளி மாணவன் ராஜராஜ சோழன் காலத்து நாணயத்தை கண்டெடுத்தான்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசித் பாலன். தமிழ் பாடத்தின் மாலைநேர சிறப்பு வகுப்பின்போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1,000 ஆண்டுகள் பழமையான ஒரு இலங்கை நாணயத்தை மாணவன் பிரசித் பாலன், கண்டெடுத்து பள்ளி தலைமையாசிரியர் அகமது பெய்சலிடம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அதை ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாணவன் கண்டெடுத்தது முதலாம் ராஜராஜ சோழன் பெயர் பொறித்த செம்பால் ஆன இலங்கை நாணயம் ஆகும். வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலாம் ராஜராஜ சோழனின் இலங்கை வெற்றியின் பின்னணியில் சிறப்பு வெளியீடாக இலங்கை காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதலாம் ராஜராஜ சோழன் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர் ஆளுகையின் கீழிருந்த நாட்டு பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது.

இந்த காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடது பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்க, அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீராஜராஜ" என 3 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காசில் பாசிபடர்ந்திருப்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லை. ஓரங்கள் தேய்ந்துள்ளன. இலங்கை காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ள நிலையில், உள்பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story