10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி.. அடுத்து நடந்த அதிர்ச்சி

தொழிலாளி மோட்டார் சைக்கிள் மீது மாணவி ஓட்டிவந்த ஸ்கூட்டர் மோதியது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம்(வயது 43). தொழிலாளியான இவர், நேற்று காலை ஆழிச்சிக்குடியில் இருந்து தொளார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அதே சமயம் பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
முருகன்குடியில் வந்தபோது செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது மாணவி ஓட்டிவந்த ஸ்கூட்டர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தசெல்வத்தின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆனந்தசெல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ஆனந்தசெல்வம் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின்பேரில் 15 வயதுடைய மாணவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட கொடுத்த அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






