8 பவுன் நகைக்காக ஆண் நண்பருடன் சேர்ந்து தோழியை கொன்ற இளம்பெண் - திருவண்ணாமலையில் பரபரப்பு


8 பவுன் நகைக்காக ஆண் நண்பருடன் சேர்ந்து தோழியை கொன்ற இளம்பெண் - திருவண்ணாமலையில் பரபரப்பு
x

நேத்ராவும், அவரது ஆண் நண்பர் திருப்பதியும் சேர்ந்து அம்சா அணிந்திருந்த 8 பவுன் நகைகளை கழற்ற முயன்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கழிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், விவசாயி. இவரது மனைவி அம்சா (வயது 29). இவர்களுக்கு நிவிஸ்தா (4) என்ற மகளும், நிவிலன் (1½) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் 15-ந்தேதி அன்று மகன் நிவிலனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மகனை தூக்கிக்கொண்டு சிகிச்சை பெறுவதற்காக திருவண்ணாமலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அம்சா சென்றார். அதன்பிறகு இருவரும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் குடும்பத்தினர் அவர்களை தேடினர். அன்று இரவு 8 மணி அளவில் திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே அந்த வழியாக சென்றவர்கள் குழந்தை ஒன்று தனியாக அழுவதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு விசாரணை நடத்தியதில், அந்த குழந்தை சக்திவேலின் மகன் நிவிலன் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து குழந்தையை, சக்திவேலிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

குழந்தை கிடைத்த நிலையில் அம்சா என்ன ஆனார் என்பது தெரியாததால் அது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் சக்திவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை மீட்கப்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் கழிகுளம் கிராமத்தை ேசர்ந்த நேத்ரா (28), கீழ்பென்னாத்தூர் கொல்லை கொட்டா பகுதியை சார்ந்த திருப்பதி (25) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நேத்ரா தனது கணவரை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக வேங்கிக்கால் பகுதியில் தனியாக வசித்து வந்ததும், கடந்த 15-ந்தேதி மருத்துவமனைக்கு வந்த தனது தோழியான அம்சாவை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு அவர் அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

அங்கு மதியம் சாப்பிட்டுவிட்டு அம்சா தூங்கியபோது, நேத்ராவின் ஆண் நண்பரான திருப்பதியும், அவரும் சேர்ந்து அம்சா அணிந்திருந்த 8 பவுன் நகைகளை கழற்ற முயன்றனர். அப்போது திடுக்கிட்டு கண் விழித்த அம்சாவை நேத்ரா துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தார். பின்னர் ஆண் நண்பரான திருப்பதியுடன் சேர்ந்து அம்சாவின் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து கழிகுளம் செல்லும் வழியில் உள்ள கல்லூரி அருகில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்த அம்சாவின் உடலை சாக்கு பையில் போட்டு பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்தில் நீர்வரத்து பகுதியில் போட்டுவிட்டு சென்றதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து நேத்ராவையும், திருப்பதியையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து நேற்று பள்ளிகொண்டாப்பட்டு பகுதி கரும்பு தோட்டத்திற்கு கீழ்பென்னாத்தூர் போலீசார் சென்று அம்சா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story