விவசாய நிலப் பட்டாக்கள் நிபந்தனைப் பட்டாக்களாக மாற்றப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


விவசாய நிலப் பட்டாக்கள் நிபந்தனைப் பட்டாக்களாக மாற்றப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
x

கோப்புப்படம்

அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட விவசாய நிலப் பட்டாக்கள் நிபந்தனைப் பட்டாக்களாக மாற்றப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் பணிகள் மேம்படுத்தப்படும் என்று தி.மு.க. அரசு வாக்குறுதி அளித்தது. வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கள் செய்யப்படுகிறதே தவிர அதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை என்பதுதான் கள யதார்த்தம் உபகாரத்திற்குப் பதிலாக உபத்திரவம் தாண்டவமாடுகிறது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை நிபந்தனைப் பட்டாவாக மாற்றி, இதன் மதிப்பு பூஜ்யம் என தி.மு.க. அரசு பதிவு செய்துள்ளதால், நூற்றுக்கணக்கான அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வனத் துறையை ஒட்டியுள்ள சுமார் 1,500 விவசாய நிலப் பட்டாக்களை நிபந்தனை பட்டாக்களாக தி.மு.க. அரசு மாற்றியுள்ளதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும், இதன் விளைவாக அங்குள்ள விவசாய நிலங்களை விற்பனை செய்ய முடியாத அவல நிலை நிலவுவதாகவும், வங்கிகளில் கூட கடன் பெற முடியாத நிலை இருப்பதாகவும்.

நிபந்தனை விதிக்கப்பட்டதற்கான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றும், இது குறித்து வட்டாட்சியரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், 18-08-2025 அன்று மீண்டும் வட்டாட்சியரை சந்தித்து விரிவாக விளக்கம் அளிக்க இருப்பதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இங்குள்ள விவசாய நிலத்திற்கான மதிப்பு பூஜ்யம் என்று பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அப்பகுதி விவசாய மக்களிடையே போதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் வேளாண் பணிகளை மேம்படுத்தும் இலட்சணமா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல் இல்லையா? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் செயலை மேற்கொண்டுள்ள தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட விவசாய நிலப் பட்டாக்கள் நிபந்தனைப் பட்டாக்களாக மாற்றப்பட்டுள்ளதை ரத்து செய்யவும், பூஜ்யம் மதிப்பு என்று பதிவு செய்யப்பட்டதை நீக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story