பேருந்துகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் - அமைச்சர் சிவசங்கர்


பேருந்துகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம்  - அமைச்சர் சிவசங்கர்
x

ஒரு பேருந்துக்கு ரூ.37,500/- வீதம் 4000 பேருந்துகளுக்கு ரூ.15 கோடி செலவில் கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-

விபத்து ஏற்படும் சாலைகள் கண்டறியப்பட்டு விபத்துகள் தடுக்கப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 5 மாதிரி தானியங்கி சோதனை நிலையம் அமைக்கப்படும். ஓட்டுநர்கள் பேருந்துகளை ஓட்டும் முறையை மேம்படுத்தும் விதமாக ஏ.ஐ. மற்றும் ஐ.ஆர். தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்பு (Driver Monitoring System) ரூ.2 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது ஓட்டுநரின் தலை நிலை, கண் சிமிட்டும் விதம் மற்றும் உடல் அசைவுகளை கண்காணித்து எச்சரிக்கை செய்வதால், பேருந்தை பாதுகாப்புடன் இயக்கலாம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 100 பேருந்து பணிமனைகளில் நைட்ரஜன் காற்று நிரப்பும் எந்திரங்களை அமைத்து பராமரிப்பை மேம்படுத்தப்படும். தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் தருமபுரி உள்ள அரசு தானியங்கி பணிமனைகள் நவீனமயமாக்கி தரம் உயர்த்தப்படும். பேருந்துகளில் 360 டிகிரி கேமராக்கள் பொருத்துவதனால், இடங்களில் பார்வைபடாத (Blind Spot) வீடியோ பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பிற வாகனங்கள் பயணிப்பதை கண்டறிவதன் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு பேருந்துக்கு ரூ.37,500/- வீதம் 4000 பேருந்துகளுக்கு ரூ.15 கோடி செலவில் கேமராக்கள் பொருத்தப்படும்.

பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்ய தேவையான நவீன எந்திரங்கள் மற்றும் கருவிகள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் பயன்படுத்தும் ஒப்பனை அறைகள் 100 பணிமனைகளில் மேம்படுத்தப்படும். திருச்சி மற்றும் சேலம் அரசு தானியங்கி பணிமனைகளில் புத்தாக்கப் பயிற்சி பெறும் அரசு துறை ஓட்டுநர்கள் பயன்பெறும் வகையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.1.10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story