அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம்

உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னை,
அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் காலமாகிவிட்ட நிலையில் அவருக்கு பதில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியது முதலே தமிழ் மகன் உசேன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக தமிழ்மகன் சென்னையில் உள்ள அப்பல்லோ பர்ஸ்ட் ரெட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால், சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. கடைசியாக ஜெயலலிதா நினைவு தினத்தின்போது, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்திருந்தார். தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், தமிழ் மகன் உசேன், தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
அதிமுக அவைத்தலைவர் ஏ.தமிழ் மகன் உசேன், உடல்நலக்குறைவால் கடந்த 16.12.2025 அன்று, சென்னை, கீழ்ப்பாக்கம், பி.எச். சாலையில் உள்ள அப்பல்லோ பர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது குணமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






