தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வழங்காமல்... டிடிவி தினகரன் அறிவுரை


தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வழங்காமல்... டிடிவி தினகரன் அறிவுரை
x

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் எனக்கு மகிழ்ச்சிதான் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் அ.ம.மு.க கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அக்கூட்டத்திற்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து செல்லும்போது, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு தகுதி இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போத தேர்தல் நேரம் என்பதால் அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து குடும்பங்களுக்கும் முறையாக நிதி போய் சேர்ந்தால் மகிழ்ச்சிதான்.

கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினால் குடிமகனாக எனக்கு மகிழ்ச்சிதான். எதிர்க்கட்சியாக இருப்பதற்காக எதுவென்றாலும் பேசுவதற்கு நான் எடப்பாடி பழனிசாமி இல்லை.

தலைவர்கள் தான் தொண்டர்களை கட்டுப்படுத்தி பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு அவர் முறைத்ததால் நான்கு தட்டு தட்டப்பட்டது என்று திருமாவளவன் போன்ற தலைவர்கள் கூறுவது நல்லதல்ல. அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.

கடந்த ஆட்சி காலத்தில் வாங்கிய கடனை நடப்பு ஆட்சிதான் கட்ட வேண்டும். 2026 பிறகு ஒரு புதிய அரசு அமைந்தால், அவர்கள் தான் இதுவரை வாங்கியுள்ள 5 லட்சம் கோடி கடனுக்கு வட்டியை கட்டவேண்டும். கூடுமான வரை கடனை அதிகரிக்காமல் இருக்க வேண்டும். அதுதான் வருங்கால வளர்ச்சிக்கு நல்லது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல திட்டங்களை அறிவிப்பது இன்றைக்கு நன்றாக இருக்கும். ஆனால் கடன்தான் அதிகரிக்கும்.

2026 தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வழங்காமல், வருங்கால சந்ததி மற்றும் தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பாக இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story