அமித்ஷாவின் பாட்சா ஒருபோதும் தமிழ்நாட்டில் பலிக்காது - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


அமித்ஷாவின் பாட்சா ஒருபோதும் தமிழ்நாட்டில் பலிக்காது - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

கோப்புப்படம் 

தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் இருப்பார்கள் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பூர்

திருப்பூர் பல்லடம் காரணம்பேட்டையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பெண்கள் திரளானோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இந்த மாநாட்டில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், திருச்சி சிவா, டி.ஆர். பாலு, ஆ. ராசா செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

திருவண்ணாமலையில் 14-ந் தேதி இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 1½ லட்சம் பேர் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை கூட்டத்தைப் பார்த்து சங்கிகள் கூட்டமும், அடிமைக் கூட்டமும் அலறியது. இன்றைய மகளிர் கூட்டத்தை பார்த்தால், அடுத்த 10 நாட்களுக்கு சங்கிகள் கூட்டம் இதைப் பற்றிதான் பேசுவார்கள்; தூங்கப் போவது இல்லை. மிகுந்த எழுச்சியோடு நடக்கிறது மாநாடு. செந்தில் பாலாஜி, கனிமொழிக்கு பாராட்டுகள்.

சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. மெகபூபா முப்தி பேட்டி அது. தாய்மொழி காஷ்மீரியில் அவர் பதில் அளித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் உருதில் பேச கூறினார். உடனே, இதே கேள்வியை தமிழ்நாட்டில் போய் மு.க.ஸ்டாலினிடம் கேட்க முடியுமா என்றார். அப்படிப்பட்ட தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். காஷ்மீரில் எதிரொலிக்கிறது தமிழ்நாட்டின் குரல்.

கேரளாவில் வைக்கத்தில் 101 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் போராட்டம் நடத்தினார். அவர் கைது செய்யப்பட்டார். அவருடைய தாய் அந்த போராட்டத்தை நடத்தினார். அந்த அளவுக்கு திராவிட இயக்கத்துக்கு மகளிர் உழைத்து வருகிறார்கள். மகளிருக்கு அண்ணா, கருணாநிதி வழியில் நம்முடைய முதல்-அமைச்சர் நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் முதன்முறையாக 1989-ம் ஆண்டு பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம பங்கு சட்டத்தை கொண்டுவந்தார்.

இந்தியாவில் முதன்முறையாக மகளிர் சுயஉதவிக்குழுவை கொண்டுவந்ததும் கருணாநிதிதான். நம்முடைய முதல்-அமைச்சர் முதன்முதலில் கையெழுத்து போட்டது, மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குத்தான். தற்போது, காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்துள்ளார். 22 லட்சம் மாணவர்கள் தினமும் பயன் பெறுகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் கொண்டுவந்தார். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 30 லட்சம் மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செல்கிறது.

மகளிர் 2.0 திட்டத்தில் இன்னும் மகளிருக்கு அதிக திட்டங்களை முதல்-அமைச்சர் கொடுப்பார். மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசு பிடுங்கி வருகிறது. சமீபத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது. அமித்ஷா அடுத்து எங்கள் டார்கெட் தமிழ்நாடு என்கிறார். சுயமரியாதை உள்ள இந்த மகளிர் கூட்டம் உள்ளவரை தமிழ்நாட்டுக்குள் உங்களால் நுழையவே முடியாது. தமிழ்நாட்டின் அமைதியை குலைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அமித்ஷாவின் பாட்சா ஒருபோதும் தமிழ்நாட்டில் பலிக்காது. தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட்-ஆப் கண்ட்ரோல்தான். தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நம்மைப்பார்த்து அ.தி.மு.க.வும் குழு அமைத்துள்ளது. நமது தேர்தல் அறிக்கையை பார்த்து காப்பி-பேஸ்ட் செய்வார்கள்.

தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் இருப்பார்கள். 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. அரசு அமைய உங்கள் உழைப்பை கொடுக்க வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் போய் சொல்ல வேண்டும். எஸ்.ஐ.ஆர். பாதிப்புகளை மக்களிடம் சொல்லுங்கள். விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் இணைக்க முயற்சி செய்யுங்கள்.

2026 தேர்தலில் வெற்றி பெற்று 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும். அடுத்த 100 நாட்கள் நீங்கள் எல்லாம் உறுதி எடுத்து செயல்பட வேண்டும். வெல்வோம் 200. படைப்போம் வரலாறு. இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story