அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும் - சீமான்

கோப்புப்படம்
அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பத்தாண்டிற்கும் மேலாகப் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்திட வேண்டுமென வலியுறுத்திப் போராடிவரும் அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றிவரும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. தங்களின் நியாயமான உரிமைக்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்து வரும் அங்கன்வாடி பணியாளர்கள் பெண்கள் என்பதையும் பாராமல் காவல்துறை மூலம் கண்ணியக்குறைவாக, கடுமையான அடக்குமுறையை ஏவி திமுக அரசு கைது செய்வது கொடுங்கோன்மையாகும்.
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டிலுள்ள மழலையர்கள் பசியால் வாடுவதை தடுக்கவும், அவர்களின் உடல் மற்றும் மனநலனை பேணுவதற்காகவும் தமிழக கிராமங்கள் தோறும் பால்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் 1982ம் ஆண்டு முதல் இந்திய மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்டத்துடன் சேர்க்கப்பட்டு அங்கன்வாடி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாட்டிலுள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கன்வாடி பணிகள் மட்டுமின்றி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி பணிகள், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் சார்ந்த பணிகளையும் கடைக்கோடி மக்கள் வரை கொண்டுபோய்ச் சேர்ப்பதில் அங்கன்வாடி பணியாளர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும், கடந்த 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்தும்கூட, அங்கன்வாடி பணியாளர்கள் இன்றுவரை திட்டப் பணியாளர்களாகவே இருத்தப்பட்டுச் சிறப்புக் காலமுறை ஊதியமாக மாதம் 3,000 முதல் 11,000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் தினமும் 8 மணி நேரம் பணிபுரிந்தும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் முறையான ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படுவதில்லை என்பது அப்பட்டமான உழைப்புச்சுரண்டலாகும்.
கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதியக்குழுவில் அரசுப் பணியாளர்களாக நிலைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். இன்று வரை அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலின்போது தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று அளித்த வாக்குறுதி என்னானது? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது அங்கன்வாடி ஊழியர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
* ஆகவே, அங்கன்வாடி ஊழியரை 3-ம் நிலை அரசு ஊழியராகவும், உதவியாளர்களை 4-ம் நிலை அரசு ஊழியராகவும் பணி வரன்முறை செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்.
* அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
* அங்கன்வாடி மையங்கள் சிறப்பாகச் செயல்படவும், அங்கன்வாடி ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கவும் அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும்.
* 10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
* பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பும், காலி பணியிடங்களை வழங்குவதற்கு முன்பும் உள்ளூர் பணியிட மாறுதல், வாரிசு பணி ஆகியவற்றை வழங்கிட வேண்டும்.
* குழந்தைகள் நலம் கருதி மே மாதம் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
* தமிழ்நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தங்களின் வாழ்வாதார உரிமைக்காக அங்கன்வாடி ஊழியர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து கோரிக்கைகள் வெல்ல துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






