மாணவன் மீது தாக்குதல்: தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம்


மாணவன் மீது தாக்குதல்: தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 March 2025 8:15 PM IST (Updated: 11 March 2025 10:22 PM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரத்தைச் சேர்ந்தவர் தங்க கணேசன். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு தேவேந்திர ராஜ் (வயது 17) உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

தேவேந்திர ராஜ், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். தற்போது பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்காக நேற்று காலையில் வழக்கம்போல் தேவேந்திர ராஜ் தனியார் டவுன் பஸ்சில் பாளையங்கோட்டைக்கு புறப்பட்டார். அரியநாயகிபுரத்தைக் கடந்து பஸ் கெட்டியம்மாள்புரம் நிறுத்தம் பகுதியில் சென்றபோது ஒரு கும்பல் திடீரென்று பஸ்சை வழிமறித்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பஸ்சுக்குள் ஏறி சென்று தேவேந்திரராஜை பிடித்து வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அவர்கள் தேவேந்திரராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க தேவேந்திரராஜ் ஓடினார். ஆனாலும் அவரை ஓட ஓட கும்பல் விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றது. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று காயமடைந்த தேவேந்திர ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. மூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களிலும் சென்று விசாரித்தனர்.

கபடி போட்டியில் நிகழ்ந்த மோதல் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் மாணவர் தேவேந்திரராஜை கும்பல் வெட்டியதா? அல்லது காதல் விவகாரத்தில் தாக்கப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கெட்டியம்மாள்புரத்தை சேர்ந்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் நெல்லை-தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி. எஸ்.டி ஆணையம்.

மேலும் இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story