சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால் பைக் விபத்து: சமையல் தொழிலாளி பலி

காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு சமையல் தொழிலாளி, சக தொழிலாளியுடன் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால் பைக் விபத்து: சமையல் தொழிலாளி பலி
Published on

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் குளம்சாகித் தம்பிதோட்டத்தை சேர்ந்தவர் மகன் சண்முகசுந்தரம் (வயது 67), சமையல் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதில் மகன் ஆறுமுகத்துடன் சண்முகசுந்தரம் வசித்து வந்தார்.

கடந்த 20ம் தேதி இரவு காயல்பட்டினத்தில் இருந்து சக தொழிலாளியான காயல்பட்டினம் சேதுராஜா தெருவை சேர்ந்த சுனைத் மகன் செய்யது முகமது புகாரியுடன் பைக்கில் ஆறுமுகநேரிக்கு சென்று கொண்டிருந்தார். பைக்கை முகமது புகாரி ஓட்டியுள்ளார். சண்முகசுந்தரம் பின்னால் அமர்ந்து சென்றார்.

காயல்பட்டினம் எல்.ஆர். நகரிலுள்ள பைக் ஷோரூம் அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் மீது மோதியதில் பைக்கில் இருந்து சண்முகசுந்தரம் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். முகமதுபுகாரி லேசான காயத்துடன் தப்பினார்.

பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த சண்முகசுந்தரத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காயல்பட்டினத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோத்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோயில்பிள்ளை ஆகியோர் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com