எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆதரவான வாக்குகளை வைத்து கொண்டு, எதிரான வாக்குகளை நீக்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது என உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சென்னை,
பீகாரில் வருகிற 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தன.
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டத்துக்கு எதிராக போராடிட, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்து கட்சி கூட்டம் நவம்பர் 2 -ந்தேதி அன்று காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" நடைபெற இருக்கிறது என அதுதொடர்பான அறிக்கை தெரிவிக்கின்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகைப்படம் ஒட்டி தர வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பார்த்து இணைக்க வேண்டும் என்று சொல்வது எல்லாம் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் என குறிப்பிட்டு உள்ளதுடன், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்? என கேள்வியும் எழுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ஆனால், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். தனக்கு ஆதரவாக இருக்க கூடிய வாக்குகளை வைத்து கொண்டு, எதிரான வாக்குகளை நீக்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறியுள்ளார். எனினும், தமிழகத்தில் அக்கட்சியின் முயற்சி வெற்றி பெறாது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.






