மரத்தில் கார் மோதி விபத்து: தந்தை,மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு


மரத்தில் கார் மோதி விபத்து: தந்தை,மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
x

சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்காக காரில் புறப்பட்டனர்.

பெரம்பலூர்,

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா தெற்கு சூரங்குடி கீரிவிளை கிராமத்தை சேர்ந்தவர் அன்புசெல்வன். இவருடைய மகன் பாலபிரபு (வயது 29). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா இச்சிப்பட்டி அருகே பூசாரி தோட்டத்தை சேர்ந்த கந்தசாமியின் மகளான சித்த மருத்துவர் கவுரியை (27) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் கவிகா என்ற பெண் குழந்தை உள்ளது. கவுரி சென்னை பல்லாவரத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். அவர், தனது கணவர், குழந்தையுடன் வசித்து வந்தார்.

பாலபிரபு தனது சொந்த ஊரான கீரிவிளைக்கு மனைவி, குழந்தை மற்றும் மாமனார் கந்தசாமியுடன் காரில் சென்றாா். அவர்கள் கன்னியாகுமரியில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்காக காரில் புறப்பட்டனர்.

நேற்று காலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலபிரபுவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிக்கெட்டு ஓடி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் கார் பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த பாலபிரபுவும், கந்தசாமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனா். கவுரியும், குழந்தை கவிகாவும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை அறிந்த பாடாலூர் போலீசார் கவுரியையும், கவிகாவையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை கவிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கவுரிக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

1 More update

Next Story