சென்னை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் - இந்திய கம்யூ. கட்சி அறிவிப்பு

கோப்புப்படம்
அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை நடத்துகிறது.
அமெரிக்க ராணுவம் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளதை கண்டித்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை நடத்துகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சோசலிச கொள்கைகளை கடைபிடிக்கும், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது அமெரிக்கா கொடூரமான ராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரசையும் கைது செய்து, தனது நாட்டிற்கு, அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வெனிசுலாவின் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும், இறையாண்மைக்கும், சுயநிர்ணய உரிமைக்கும் எதிரான அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்தும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும், அமெரிக்கா நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்திடக் கோரியும், அமெரிக்கப் படைகள் வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேற வலியுறுத்தியும், மத்திய மோடி அரசு அமெரிக்காவை கண்டிப்பதோடு ‘வெனிசுலாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிட வேண்டும் என வலியுறுத்தியும் நாளை (06.01.2026) காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.
இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ரா.முத்தரசன் தலைமை தாங்குகிறார். கட்சியின் மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, தேசியக் குழு உறுப்பினர்கள் வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் மு.வரதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ஏ.ராஜ்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பி.வி.சீனிவாசன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன் ஆகியோர் இப்போராட்டத்திற்கு முன்னிலை வகிக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






